ரொம்ப நாளைக்கு அப்புறம் கல்லூரியில் படித்த நண்பனிடமிருந்து இருந்து இமெயில் ஒன்று வந்தது, நாம் எல்லோரும் பார்த்து ரொம்ப நாளாச்சே (சுமார் 14 வருடங்கள்) இப்ப ஒருமுறை சந்திக்கலாமா என்று.
சரி எதற்கும் பதில் அனுப்பி வைக்கலாமே என்று பதில் அனுப்பினேன், சந்திப்பு நடந்தால் வேண்டிய ஏற்பாடுகள் செய்ய உதவியாய் இருக்கிறேன் என்று.
அப்ப எதுவும் தெரியலை இது எதில் மாட்டிவிட போகுது என்று.
முதலில்இரண்டு பேருக்கு மின்னஞ்சல் தட்டிவிட, பதிலும் வந்தது, பதிலை படித்தவுடன் அடைந்த சந்தோஷம் சொல்லி முடியாது. மின்னஞ்சலில் அலைபேசி எண்ணையும் தந்துவிட தெரிந்த சென்னை நண்பர்கள் தொடர்பு கொண்டார்கள்,
நீண்ட இடைவெளிக்கு பிறகு நண்பர்கள் குரலை கேட்க இனிமையாக தான் இருந்தது.
முதலில் ஒரு சின்ன முன்கதை சுருக்கம். நாங்கள் சுமார் 38 பேர் காட்டாங்குளத்தூர் பொறியியல் கல்லூரியில் 1986-1990 கட்டடவியல் படித்த மாணவர்கள். படிப்பு முடிந்தவுடன் எல்லோரையும் போல் பசுமை நிறைந்த நினைவுகளேனு ஹோட்டலில் கூடி பாடி பிரிந்தவர்கள், அதன் பிறகு 1994ல் ஒருமுறை மெரினா கடற்கறையில் சிலர் சந்தித்து பிரிந்தோம், அதன் பிறகு இப்போது தான் மீண்டும் சந்திக்கலாம் என திட்டம் போட்டோம்.
எல்லோரும் சந்திப்போம் என்று சொன்னவுடேனேயே திட்டம் என்னவோ நல்லாதான் இருக்கு ஆனா எல்லோரையும் எப்படி கண்டுபிடித்து சேர்ப்பதுனு தான் பெரிய யோசனை, முதலில் இமெயில் அனுப்பிய நண்பனிடம் வேறு யார் இமெயில் முகவரி உண்டோ அவ்வளவையும் அனுப்ப சொன்னேன்.
பெரிய ஒரு குயர் நோட் அளவில் முகவரி எல்லாம் வரும் என்று பார்த்தால் எனக்கு தெரிந்தது இவ்வளவு தான்னு 3 பேர் தான் தேறினார்கள். இருந்தாலும் சென்னையில் உள்ள நண்பனின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது, வேறு ஒரு நண்பனின் முகவரி கிடைத்தது அவனிடமிருந்து இன்னொன்று என மொத்தமாக 19 பேர் தேறினார்கள் மீதி உள்ளவர்களை ஒரு நண்பி நான் ஆட்டோகிராப்பில் எழுதி வாங்கிய விலாசத்திற்கு கடிதம் எழுதி கண்டுபிடித்து தருகிறேன் என்றாள், நானும் ஆஹா இந்த யோசனை நமக்கு தெரியாம போனதே, இதற்காகவாவது கல்லூரியின் கடைசி தினத்தன்று நாமும் ஆட்டோகிராப் நோட்டை தூக்கிட்டு போய் கையெழுத்தை வாங்கி இருக்கலாமோனு தோணிச்சு, பிறகு நண்பிக்கு போன் மேல் போன் போட்டு தினமும் ஏதாவது பதில் வந்ததானு கேட்டுட்டு இருந்தேன் ம்ஹீம் தபால்தலை செலவு தான் மிச்சம், இந்த காலத்தில் யாரும் கடிதம் படிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன், இல்லை வந்த கடிதத்தை பிரேம் போட்டு வைத்து விட்டார்களோ என்னவோ. ஒருவரும் பதில் அனுப்பவில்லை.
ஒவ்வொரு நண்பனையும் கண்டுபிடித்து தொடர்பு ஏற்படுத்தியதே ஒரு நெடுந்தொடர் அளவுக்கு எழுதலாம். மல்டி லெவல் மார்க்கெட்டிங் போல ஒவ்வொரு நண்பனும் கட்டாயம் 2 பேரையாவது தொடர்பு ஏற்படுத்தியே தீரணும்னு சட்டம் எல்லாம் போட்டோம், எப்படியோ பார்த்தது கேட்டது படித்ததுனு 19 பேரை தொடர்பு கொண்டோம்.
இதிலும் சிலர் வெளிநாடுகளிலும் வெளிமாநிலதிலும் இருந்தனர். அதனால் எல்லோரும் ஒரு நாளில் பார்த்து பேசிட ஞாயிற்றுக்கிழமை தான் வசதியாக இருக்கும் என தீர்மானித்தோம், இதற்கு அனைவரும் ஒத்துக்கொண்டனர்.
அதன் பிறகு தேதி, நேரம் மற்றும் இடம் முடிவு செய்ய பெரும்பாடு பட வேண்டியதாக போயிற்று, நண்பர்களில் சிலர் வெளியூரில் இருந்தனர், சிலர் வெளிநாடுகளில் இருந்தனர். வெளிநாட்டில் இருப்பவர்களால் வர இயலாது என் தெரியும்.
சரி உள்ளூரில் இருப்பவர்கள் இவ்வளவு ஆண்டுக்கு பிறகு சந்திப்பதால் சந்திக்க வருவார்கள் என நினைத்து இருந்தேன். ஆனால் அதற்கும் சோதனை வந்தது. ஒரு இடத்தை தெரிவு செய்தால் அந்த இடம் வசதிப்படாது, நீண்ட தூரம் என்று ஒரு கருத்து, சரி அது வேண்டாம் இன்னொரு இடம் சொன்னால் அதில் உணவு சரியாக இருக்காது, அனைவரும் சேர்ந்து அமர்ந்து கொண்டாட முடியாது என ஒரு கருத்து, சரி இரண்டும் வேண்டாம் வேறு ஒரு இடம் இருக்கு என மூன்றாவது இடம் சொன்னால் அதற்கு வாஸ்து சரியில்லை அங்கே போயா நமது சந்திப்பை வைக்கணும் என்று ஏகப்பட்ட கண்டனங்கள், ஆஹா ஒரு இடத்தை சரியில்லை வேண்டாம் என்று சொல்ல இவ்வளவு காரணம் சொல்லலாம் என்பதே அப்போது தான் தெரியவந்தது.
எப்படியோ பேசி முடிவெடுத்து ஒரு பிரபல ஹோட்டலில் சந்திப்பது என இடம் முடிவானது, நண்பன் ஒருவன் ஹோட்டலில் பேசி முடிவு செய்வது என் பொறுப்பு என எடுத்துக்கொண்டான்.
அடுத்து தேதி குறிப்பது இதிலும் பல தரப்பு வாதி பிரதிவாதத்தையும் கேட்ட பின்பு நாட்டாமை தீர்ப்பு வழங்கினார்(நாட்டாமைக்கு பெண்பால் உண்டா?), வழக்கம் போல் நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுனு குரலும் கேட்டது பிறகு நாட்டாமை குரல் எழுப்பியவரை பார்த்து செல்லாது செல்லாதுனு இரண்டு முறை சொன்ன பிறகு தேதியும் இடமும் முடிவானது 18-05-08 சென்னை எழும்பூர் பூந்தமல்லி சாலையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டல் என்று.
இந்த தகவலை அனைவரிடமும் தெரிவிக்க வேண்டுமே மறுபடியும் இமெயில் அனுப்பி எல்லோரையும் சொந்த குடும்பத்துடன் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டது, அதற்கு பிறகு நடந்தது தான் செம காமெடி இன்னும் பள்ளிக்கூடத்தில் படிப்பது போல் i am suffering from என்று சொல்லி ஓரிரு நபர்கள் பின் வாங்கினர், தாத்தாவுக்கு தலைவலி, பாட்டிக்கு பல்வலி என வேறு சிலர் விண்ணப்பம் வைத்தனர்.
எப்படியோ மீதி இருந்தவர்கள் எல்லாம் விழா நாளன்று 12 பேர் வந்தனர் 19 பேரில் 12 பேர் வந்தது பெரிய சாதனையாகவே கருதுகிறோம்.
விழா பிரமாதமாக நடந்தது, எல்லோரும் இத்தனை வருடம் கழித்து பார்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைந்தோம், வந்திருந்த அனைவரும் கொசுவர்த்தி கொளுத்தி மகிழ்ந்தனர், பல பழைய கதைகள் வெளி வந்தன. மொத்தம் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து 27 பேர் பங்குபெற்றோம் மாலை 5 மணிக்கு தொடங்கிய விழா 10 மணிக்கு முடிந்தது, பிரியாவிடை கொடுத்து பிரிந்தோம் மீண்டும் சந்திப்பதற்காக.
இவ்வளவு இம்சை இருந்தும் நீ ஏன் இவ்வளவு வேலையையும் இழுத்து போட்டு பார்க்கணும் என்று உங்களுக்கு கேட்க தோன்றுது தானே, அட இவ்வளவு சிரமம் இருந்தாலும் 18 வருடம் கழித்து மாணவர்கள் திரும்பவும் சந்திப்பது இந்தியாவிலேயே ஏன் worldலேயே இது தான் முதல் முறையா இருக்கும்.
அதுவும் இல்லாம கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு நண்பன் சொன்னான் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் இவன் தாங்கிக்கிறானே இவன் ரொம்ப நல்லவன்னு.
4 வருடம் ஒன்றாக படித்து பழகி விட்டோம் என்பதற்காக 18 வருடம் கழித்தும் சந்தித்து எங்கள்,
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
என உறுதி செய்ய வந்த அனைத்து நண்பர்களுக்கும், நண்பிக்கும் அவர்தம் வாழ்க்கை துணைக்கும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த நண்பனுக்கும் மீண்டும் எனது நன்றி.