Saturday, December 20, 2008

பயணக் கட்டுரை :: மதுரையை நோக்கி Part 1

பயணக் கட்டுரை :: மதுரையை நோக்கி

ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் ஒரு பதிவு, பதிவு எழுத நேரமின்மை காரணமில்லை, எனது மகனுக்கும் ஒரு வலைப்பதிவு உருவாக்கி தந்துள்ளேன்(nsnishanth15.blogspot.com), அவனும் சில பதிவுகள் போட்டுள்ளான், இப்ப போட்டியே அதில் தான் உள்ளது அவனது பதிவுக்கு நிறைய வருகை வேண்டுமாம், என் பதிவுகளை விட அவன் பதிவில் பின்னூட்டமும் அதிகம் இருக்க வேண்டுமாம், என்ன செய்ய? கடந்த முறை நான் எழுதவிருந்த பதிவை அவன் எழுதி அவனது பதிவில் இட்டு 4 பின்னூட்டமும் வாங்கிவிட்டான், எனக்கு இது வரை வந்த பின்னூட்டமே அதிகபட்சம் இரண்டு தான்.

மேலும் எனது நண்பன் ஒருவனும் என்ன இப்ப பதிவு ஒண்ணும் போடுவது இல்லையே ஏன்? என்று பாசத்துடன் கேட்டுவிட்டான், ஒருவர் கேட்டபின்னும் பதிவு போடலைன்னா அப்புறம் என்ன ஆவது.

இது தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு நடந்த நிகழ்ச்சி (24-10-2008), அதற்கு முன் ஒரு டார்ட்டாய்ஸ்.,

2003ல் வெளிநாட்டு வேலை மோகத்தில் தோஹாவில் ஒரு வருடம் பணி புரிய சென்றிருந்தேன், முதல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, அப்போது தான் இராக் குவைத் யுத்தமும் நடைபெற்று கொண்டிருந்தது.

சென்னையில் இருந்து மஸ்கட் அங்கிருந்து மனாமா பிறகு தோஹா என விமான பயணம்.

நேரடி விமான சேவை கிடையாது மேலும் டிக்கட் செலவும் என்னுடையதே தேடி பிடித்து இந்த டிக்கட்டை வாங்கினேன், மஸ்கட்டில் விமானம் இறங்கும் போதே பாலைவன தரிசனம் கிடைத்தது அங்கு விமான நிலையத்தில் அமெரிக்க படை விமானங்கள் நின்றிருந்தது அப்போதே திக்கென்றிருந்தது, பின் மனாமா சென்று சேர்ந்த போது மணி பிற்பகல் 12 இருக்கும்.

அடுத்த விமானம் மாலை 6 மணிக்கு தான் கொஞ்ச நேரம் விமான நிலையத்தை சுற்றி வந்தேன் நிறைய விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றி இருந்தார்கள் எல்லாம் அமெரிக்க ராணுவ விமானங்கள் அந்த விமான நிலையத்திலிருந்து கிளம்பி போவதால்.

அமெரிக்க டாலர் கொடுத்து போன் அட்டை ஒன்று வாங்கினேன், எவ்வளவு மதிப்பு எவ்வளவு மிச்சம் கொடுத்தார்கள் ஒன்றும் தெரியாது டாலரை அப்படியே வாங்கினார்களே தினாராக மாற்ற சொல்லாமல் அதுவே பெரிய நிம்மதியாக இருந்தது.

வீட்டிற்கு போன் செய்து மனாமாவில் இருப்பதாக சொன்னேன் வாங்கிய அட்டை வேறு இடத்தில் உபயோகிக்க முடியாதே அதனால் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை அட்டை தீரும் வரை வீட்டிற்கு போன் பண்ணி கொண்டிருந்தேன்.

மதியம் சாப்பிட ஒரு கூப்பன் கொடுத்தார்கள், போய் சாப்பிட்டுவிட்டு வந்து 6 மணி விமானம் எப்ப கிளம்பும் என்று பார்த்துக்கொண்டிருந்தேன், 5.30 மணியாயிற்று ஒரு அறிவிப்பும் வரவில்லை போய் விசாரணையில் கேட்டால் விமானம் தாமதம் என்று சொன்னார்கள்.

என்னை தோஹாவிலிருந்து கூட்டி செல்ல வரும் வாகனம் இந்த தாமதத்தால் போய்விடுமா இல்லை காத்து நிற்குமா என உள்ளூர ஒரே பயம். ஒரு வழியாக டென்ஷனை கூட்டி இரவு 8.00 மணிக்கு விமானம் புறப்பட்டது பசி வேறு, அந்த விமானி அது தெரியாமல் தாமதமாக புறப்பட்டதால் விரைவாக தோஹா போவதாகவும் (கஜா பாணியில் ஏதாவது ஷார்ட் கட் உண்டோ என்னவோ) சிற்றுண்டி எதுவும் வழங்கமாட்டோம் என்று சொன்னான், ஆனால் ஒரு மணி நேரம் கழித்து தான் தோஹா போய் சேர்ந்தது.

ஒரு வழியாக விசா அடித்து வெளியே வர கூட ஒரு அரை மணி நேரம் ஆனது விமானதளத்தின் வெளியே எனது பெயர் அட்டையை வைத்துக்கொண்டு யாராவது நிற்பார்கள் என எதிர்பார்த்தால் ஒருவரையும் காணோம் மொழி தெரியாத நாட்டில் குடும்ப பாட்டை பாடி கூட கண்டு பிடிக்கமுடியாதே என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஒருவர் வந்து நீங்க தான் நாகராஜா என்று கேட்டார் ஆம் என்று சொன்னவுடன், (எப்படி தான் சரியாக என்னை கண்டுபிடித்தாரோ! இன்று வரை எனக்கு ஆச்சரியம் தான்) பெட்டி எல்லாம் வாங்கி காரில் போட்டுவிட்டு கார் விரைந்தது, தாமதம் ஆனதால் வந்த வருத்தம் போலும்.

பிறகு இன்னொரு காருக்கு மாறி சுமார் ஒன்றரை மணி நேர பயணத்துக்கு பிறகு ஒரு பாலைவன கேம்ப்பை அடைந்தோம் மணி சுமாராக இரவு 11 இருக்கலாம் ஒரு ஜூஸ் மட்டும் கிடைத்தது.

கேம்ப்பை அடைந்தவுடன் ஒருவர் வந்து நீங்க தமிழா என்று கேட்டார், பெரிய நிம்மதியாக இருந்தது தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார் கார்த்திக் மதுரையிலிருந்து என்று, பின் அறையை அடைந்தோம் ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்து காலையில் பார்க்கலாம் என சொல்லிவிட்டு சென்றார்.

களைப்பு, விமான பயணம், நேர வித்தியாசம், பசி புது இடம் புது வேலை பற்றிய பயம் எல்லாம் சேர்ந்து தூக்கம் வர ரொம்ப நேரம் பிடித்தது பிறகு எப்பொழுதோ தூங்கி போனேன்.

அடுத்த நாள் காலையில் விழித்து எழுந்து கேம்ப்பை பார்த்தால் ஒரு ஆரவாரம் இல்லாமல் இருந்தது, பிறகு ஒரு பிக்கப் வண்டி வர பணியிடத்துக்கு சென்றேன் சுமார் 20 கீலோமீட்டர் தள்ளி பாலைவனத்தில் இருந்தது.

சிறிது நேரம் கழித்து கார்த்திக் வந்தார், வேலை நேரங்களை சொன்னார், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்வதாக சொன்னார், ஒருவழியாக மதிய உணவு வந்தது சுமார் 27 மணி நேரத்துக்கு பிறகு அப்போது தான் உணவு சாப்பிட்டேன். நண்பரிடமிருந்து அலைபேசி வாங்கி கொடுத்து வீட்டிற்கு தகவல் கொடுக்கவும் உதவினார்.

நாங்கள் தங்கி இருந்த இடத்தில் கடைகள், தொலைபேசி, தபால், மருத்துவ வசதி, எங்கேனும் செல்ல பேருந்தோ டாக்ஸியோ எதுவும் கிடையாது. ஒரே ஒரு மலையாளி ஹோட்டல் மட்டும் தான் இருந்தது அதுவும் 1.50 கீமீ தூரம் இருக்கும். அருகில் இருந்த அங்காடிக்கு போக 18 கீமீ தூரம் தோஹா 95 கீமீ தூரம். பணியிடத்திலும் அதே நிலவரம் தான் தொலைபேசி கூட கிடையாது. இணையதளம் எல்லாம் பிறகு எப்படி வரும்.

நாட்கள் செல்ல செல்ல நல்ல சிநேகிதர்கள் ஆனோம், அரபு நாட்டில் எப்படி இருக்க வேண்டும் என கற்றுக்கொடுத்தார். அவர் குழந்தையின் பெயர் தேர்வு கூட என்னிடம் தான் கேட்டார்.

வெள்ளிக்கிழமை விடுமுறை நாளில் தோஹா சென்று வருவோம் வீட்டிற்கு தொலைபேசியில் பேச. இப்படியாக ஒரு வருடம் கழிந்தது நான் திரும்பி வந்துவிட்டேன் இந்தியாவிற்கு. எப்போதாவது தொலைபேசியில் பேசுவதோடு சரி.

கார்த்திக் தோஹா பணி நிறைவு பெற்றதும் துபாய் சென்றார். அங்கிருந்தும் தவறாமல் தொடர்பு கொள்வார்.

விடுமுறையில் இந்தியா வரும் போது மறக்காமல் தொலைபேசியில் பேசிவிடுவோம் விடுமுறை முடியும் வரை குறைந்தது வாரத்துக்கு 2 முறையாவது, ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வந்து செல்லுமாறு கேட்டுக்கொள்வேன் பார்க்கலாம் என்பார், சந்திக்க தான் வேளை வரவில்லை.

இந்த வருடம் தீபாவளிக்கு மதுரைக்கு விடுமுறையில் வந்திருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார், வழக்கம் போல் நான் சென்னை வர சொல்லி கூப்பிட்டேன், நண்பரை பார்த்தது போலவும் ஆயிற்று அவரது தீபாவளி ஜவுளிகளையும் சென்னையில் முடித்துவிடலாம் என சொன்னேன் பார்க்கலாம் என கூறினார், அவர் என்னை மதுரைக்கு வருமாறு அழைத்தார் வழக்கம் போல் பார்க்கலாம் என கூறினேன்.

இது நடந்தது 17-11-08. நான் அப்போது அலுவலக பணியாக டில்லியில் இருந்தேன். உடனே வீட்டிற்கு தொடர்பு கொண்டு ரயிலில் சென்னை – மதுரை செல்ல டிக்கட் இருக்கிறதா என பார்க்க சொன்னேன், தீபாவளி விடுமுறையில் வெள்ளிக்கிழமை டிக்கட் கிடைத்துவிடுமா என்ன? திரும்பி வர 25‑11-08 திருநெல்வெலி சென்னை specialல் டிக்கெட் இருந்தது உடனே அதை book செய்துவிட்டு, சென்னை – மதுரை செல்ல பஸ் டிக்கட் கிடைக்குமா என பார்க்க தாம்பரம் SETCல் கேட்டால் எல்லாம் ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவு முடிந்துவிட்டது என பதில் கிடைத்தது.பிறகு விடாமுயற்சியாக, KPN, ABTX Travels, Rathimeena எல்லாம் போய் பார்த்தாச்சு ஒண்ணும் கிடைக்கலை, இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை?, வருவதற்கு டிக்கெட் எடுத்தாச்சு போக கிடைக்காது போலிருக்கே, எடுத்த டிக்கட் ரத்து செய்ய வேண்டியது தானோனு யோசிக்கும் போது வேறு ஒரு நண்பனின் மனைவி ரயில்வேயில் வேலை செய்வது நினைவுக்கு வந்தது உடனே அலைபேசியில் தொடர்பு கொண்டு எப்படியும் சென்னை – மதுரை செல்ல டிக்கட் எடுத்து தர சொல்லி கேட்டேன் 19-11-08 அன்று tatkal bookingல் எடுத்து கொடுக்க முயற்சிப்பதாக சொன்னான், எப்படியும் எடுத்து தருமாறு சொன்னேன், 19.11.08 காலை தகவல் கிடைத்தது பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் tatkal bookingல் டிக்கட் கிடைத்து இருப்பதாக, மிக சந்தோசமாக இருந்தது.

24-11-08 அன்று நல்ல மழை, இது போதாது என்று இலங்கை தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மனித சங்கிலி போராட்டம் மேலும் திருச்சி மதுரை செல்ல 300 சிறப்பு பேருந்துகள், மாநகர போக்குவரத்து கழகமும் தன் பங்குக்கு 200 பஸ்களை திருச்சி வேலூர் திண்டிவனம் விழுப்புரம் என இயக்க போவதாக அறிவித்தது.

அலுவலகத்தில் அன்று தான் தீபாவளி பரிசாக ஒரு electric rice cooker கொடுத்தார்கள் எப்படியோ சமாளித்து 4 மணிக்கு எல்லாம் கிளம்பினால், நல்ல மழை பஸ்க்காக காத்திருந்தால் ஒரு பஸ் கூட வரலை க்ஷேர் ஆட்டோ எல்லாம் நிரம்பி வந்தது ஒரு ஆட்டோ கூட நிற்கவில்லை, பஸ் நிறுத்தத்தில் சரியான கூட்டம் எல்லாம் தீபாவளி கொண்டாட ஊருக்கு போகும் உற்சாகத்தில் இருந்தனர். நான் நடக்க தொடங்கினேன் நல்ல போக்குவரத்து நெரிசல் ஏதாவது பஸ் வழியில் நின்றிருந்தால் ஏறி போய்விடலாம் என ஒரு பேராசை தான். ஒரு பஸ் கூட கண்ணில் படவில்லை, வேறு வழி தன் காலே தனக்கு உதவினு நினைச்சிட்டு நடக்க ஆரம்பித்தேன் 4 கீமீ தள்ளி உள்ள ரயில் நிலையத்துக்கு, வழியெல்லாம் மழை தான் நாம் நனைந்தாலும் electric rice cooker நனையகூடாதுனு குடையை அதற்கு பிடித்து நடந்தே வந்தேன், வரும் வழி எல்லாம் மழை நீர் தேங்கி இருந்தது போக்குவரத்து சுத்தமாக நின்று போயிருந்தது. 4 கீமீ கடந்து வர இரண்டு மணி நேரம் ஆனது 6.00 மணிக்கு இரயில் நிலையம் வந்து சேர்ந்தேன்.

ரயில் நிலையத்தில் நல்ல கூட்டம், ரயில்கள் வேறு 15 நிமிடம் தாமதமாக வந்துகொண்டிருந்தது, செங்கல்பட்டு வண்டி ஒன்று வந்தது அடித்து பிடித்து ஏறினாலும் உள்ளே போக முடியவில்லை ஒரு வழியாக அடுத்த ஸ்டேசனில் உள்ளே நகர்ந்து வந்து சேர்ந்தேன்.

வீட்டிற்கு வந்து சேர 7 மணி ஆகியது மழை இப்போது கொஞ்சம் குறைந்திருந்தது, உடனே நனைந்த உடைகளை மாற்றிவிட்டு மீண்டும் எழும்பூர் செல்ல நான், மனைவி மற்றும் மகனுடன் கிளம்பினேன், கடற்கறை செல்லும் மின்சார ரயில் 7.25க்கு வந்தது அது கிளம்பியவுடன் வழியில் ஒரு லெவல் கிராசிங், வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்ததால் ரயில் 20 நிமிடம் நின்று வழிவிட்டது பிறகு கிளம்பி போகும் போது சாலை எங்கும் வாகனங்கள் அணி வகுத்து நின்று கொண்டிருந்தது எங்கும் நகர இடம் இல்லை, நல்ல வேளை நாம் ரயிலில் போக முன் பதிவு செய்தது நல்ல புத்திசாலித்தனம் என்று நினைத்துக் கொண்டேன்.(அது எப்படி காலை வாரி விட்டது என்று பிறகு சொல்கிறேன்).

No comments:

Post a Comment

நாகராஜ் - சென்னை